திருச்சி மக்களவைத் தொகுதியின் 44 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அதிமுக-வும் திமுக-வும் நேரடியாக களம் காண்கின்றன.
1957-ல் முதல் முறையாக தனது வேட்பாளரை களத்தில் இறக்கியது திமுக. அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளரான எம்.எஸ்.மணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதற்குப் பிறகு நடைபெற்ற நான்கு மக்களவைத் தேர்தல்களில் வேட்பாளரை நிறுத்தவில்லை திமுக. 1980-ல் மார்க்சிஸ்ட் வேட்பாளரை வீழ்த்தி திருச்சி தொகுதியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய திமுக, 1984-ல் காங்கிரஸிடம் தோற்றது. அதன்பிறகு 30 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் திருச்சியில் உதயசூரியன் நேரடியாக களமிறங்குகிறது.
திருச்சி மக்களவை தொகுதியில் 2001 இடைத் தேர்தலில்தான் அதிமுக முதல் முறையாக தனது வேட்பாளரை நிறுத்தியது. பாஜக எம்.பி.யான ரங்கராஜன் குமரமங்கலம் கால மானதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தலித் எழில்மலையிடம் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக-வின் சுகுமாரன் நம்பியார் தோல்வியடைந்தார். கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் குமாரிடம் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தோல்வியைத் தழுவினார்.
இத்தனை போட்டிகள் இருந் தாலும் திருச்சி நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் திமுக-வும் அதிமுக-வும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில்லை.
இந்தத் தேர்தலில்தான் முதல்முறையாக இரு கட்சிகளும் நேரிடையாக போட்டியைச் சந்திக்கவுள்ளன. இதனால் திருச்சி மக்களவைத் தொகுதி அரசியல் நோக்கர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.