தமிழகம்

கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல்: கணினி ஆசிரியர்கள் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.அருள்ஜோதி, மாநில பொதுச் செயலாளர் ஆர்.பரசுராமன் ஆகியோர் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆண்டுதோறும் நடத்தப்படும் இட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று, அவர்கள் விரும்புகின்ற பள்ளிக்கு மாறுதல் பெற்று பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட கணினி பயிற்றுநர்கள் கடந்த 7 ஆண்டுகளாக தொலைவான இடங்களில் பணியாற்றிவருவதால் குடும்பத்தைப் பிரிந்து வயதான பெற்றோர்களை உடனிருந்து கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

எனவே, எங்களின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு கலந்தாய்வு நடத்தி பொது இடமாறுதல், விருப்ப இடமாற்றம், மனமொத்த மாறுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்களுக்கு கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் அளிக்கப்பட்டது. அதைப் போன்று எங்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்துமாறு வேண்டுகிறோம்.

SCROLL FOR NEXT