தமிழகம்

‘உலகப் பாரம்பரிய சின்னமாக செஞ்சிக் கோட்டையை சேர்க்க முயற்சி’: தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

உலகப் பாரம்பரிய சின்னங்கள் வரிசையில் தமிழகத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சென்னை வட்டக் கண்காணிப்பாளர் (கோயில் ஆய்வுத் திட்டம்) முனைவர் கே.லூர்துசாமி தெரிவித்தார்.

சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியைத் தொடங்கி வைத்த முனைவர் கே.லூர்துசாமி, பின்னர் நிருபர்களிடம் கூறியது:

இந்திய அளவில் தொல்லியல் ஆய்வுத் துறையால் 30 உலகப் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் குடைவரைக் கோயில், கங்கை கொண்டசோழபுரம் கோயில்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

இதில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழமையான செஞ்சிக் கோட்டையையும் சேர்க்க ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்புக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை எதிர்பார்த்துள்ளோம்.

இந்தியாவின் பழம் பெருமை வாய்ந்த கட்டிடக் கலை, ஓவியக் கலை, சிற்பக் கலை, கலாச்சாரம், பண்பாடு குறித்து மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகை யில், தமிழகத்திலேயே கும்ப கோணத்தில் மட்டும் உலக அருங்காட்சியக தினத்தை யொட்டி இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது” என்றார்.

இந்தக் கண்காட்சியில், கட்டிடக் கலை, சிற்பம், ஓவியம், பண்பாடு, வரலாற் றுச் சின்னங்கள், இயற்கை அமைவிடங்கள் குறித்த 300-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி முதல்வர் எம்.ரேவதி, புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் போராசிரியர் கே.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் 20-ம் தேதி வரை கண்காட்சி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT