டெல்டா பகுதி விவசாயிகள் வாங்கிய நகைக்கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி டெல்டா பகுதிகளில் 2012 - 2013-ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத்துக்காக கூட்டுறவு, பொதுத்துறை, மற்றும் வர்த்தக வங்கிகளில் வாங்கிய நகைக்கடனை திரும்ப செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர். அந்த வருடம் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் வழங்கிய நகைக்கடனை, 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிப்பு செய்தது.
இந்த சூழலில் 2013 – 2014 ஆண்டிலும் குறுவை சாகுபடி நடைபெறவில்லை இதனால் வாங்கிய கடனுக்கு விவசாயிகளால் வட்டி கூட செலுத்த முடியவில்லை. இந்நிலையில் 2012-ம் ஆண்டில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடனுக்கு, வட்டி மற்றும் அபராத வட்டியை சேர்த்து மே 30-ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்று வங்கிகள் நெருக்கடி தருகின்றன.
கடும் வறட்சி, பருவம் தவறிய மழை, கூலி உயர்வு, உரத் தட்டுப்பாடு, மானியம் ரத்து, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் விவசாயத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வாங்கிய நகைக்கடனுக்காக அவர்களை கட்டாயப்படுத்தி வசூலில் ஈடுபடக் கூடாது. விவசாயத்துக்கு வழங்கப்பட்ட கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.