சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவு மூலம் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.
சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் கணக்கு ரீதியான பிழை இருப்பதைச் சுட்டிக்காட்டி அதை நிரூபிப்பேன். ஜெயலலிதா முதல்வரானால் அவர் மீண்டும் பதவி விலக வேண்டியிருக்கும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று 2003-ம் ஆண்டு பெங்களூருவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.
நீண்ட காலமாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசியும் நிரபராதி என தீர்ப்பளித்தது. மேலும், பல கோடி ரூபாய் சொத்துக்கள் விடுவித்தது.