தமிழகம்

மீன்பிடி தடைக் காலம் முடிந்தது: 50 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்

செய்திப்பிரிவு

கிழக்குக் கடற்கரை பகுதிகளில் அமலில் இருந்த மீன்பிடி தடைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்குச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடலில் கடந்த 45 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக் காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை இரவு தங்கள் படகுகளில் ஐஸ் கட்டிகளையும், வலைகளையும் ஏற்றிக் கொண்டு மீன்பிடிக்கச் சென்றனர்.

சனிக்கிழமை அதிகாலையில் பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, எஸ்.பி. பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர். மொத்தம் 15,000-க் கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள் ளனர். மீன்பிடி தடைக் காலத்தில் அதிக மீன்கள் உற்பத்தியாகி இருக்கும் என்பதால் தற்போது அதிக மீன்கள் அதிகம் கிடைக்கும் என்கிற உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை - தமிழக மீனவர்கள் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது?

இலங்கை கடற்படையினர் கடந்த ஜூன் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 87 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். பின்னர் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அவர்களது படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.

இலங்கை அதிபராக சிறிசேனா பதவியேற்றதும் தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் விடுவிக்க உத்தரவிட்டார். 87 படகுகளில் 66 படகுகள்தான் விடுவிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு இலங்கை கடற்படை 25 விசைப்படகுகளுடன் 177 மீனவர்களை சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் 25 படகுகள் விடுவிக்கப்படவில்லை. விசைப் படகுகளை திரும்பபெறும் வகையிலும், இருநாட்டு மீனவர்களின் நலன் குறித்தும் இலங்கை - தமிழக மீனவர் களிடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மீனவர்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT