மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவடைவதைத் தொடர்ந்து 45 நாட்களாக முடங்கியிருந்த ஐஸ் தயாரிப்பு தொழில் மீண்டும் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி பகுதியில் 27 ஐஸ் பார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பெரும்பாலும் விசைப்படகுகளை மட்டுமே இந்த ஐஸ் தொழிற்சாலைகள் நம்பியுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் ஐஸ் பார்களில் 80 சதவீதம் விசைப்படகுகளில் தான் பயன்படுத்தப்படுகின்றன.
படகுகளில் எடுத்து செல்வர்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவை ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்துவிட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களை பதப்படுத்துவதற்காக மீனவர்கள் பெரிய ஐஸ் கட்டிகளை படகுகளில் எடுத்து செல்வர்.
நாட்டுப்படகுகள் குறைந்த தொலைவுக்கே சென்று திரும்புவதால் பெரிய அளவில் ஐஸ் பார்களை கொண்டு செல்வதில்லை. எனவே, ஐஸ் தொழிற்சாலை முழுக்க முழுக்க விசைப்படகுகளை மட்டுமே நம்பி செயல்பட்டு வருகின்றன.
ரூ.82-க்கு விற்பனை
ஒவ்வொரு விசைப்படகிலும் தினமும் 15 முதல் 30 ஐஸ் பார்கள் எடுத்து செல்லப்படும். 50 கிலோ எடை கொண்ட ஒரு ஐஸ் பார் ரூ.82-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாக ஒவ்வொரு ஐஸ் தொழிற்சாலையிலும் தினமும் சராசரியாக 300 முதல் 400 ஐஸ் பார்கள் தயாரிக்கப்படும். 27 தொழிற்சாலைகளிலும் தினமும் சராசரியாக 10 ஆயிரம் ஐஸ் பார்கள் தயாரிக்கப்படுகின்றன.
45 நாட்களாக முடக்கம்
45 நாள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக ஐஸ் பார்களின் தேவை அடியோடு இல்லாமல் போய்விட்டது. இதனால் பெரும்பாலான ஐஸ் தொழிற்சாலைகளில் கடந்த 45 நாட்களாக ஐஸ் உற்பத்தி நடைபெறவில்லை.
மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. மீனவர்கள் 30-ம் தேதி அதிகாலை முதல் கடலுக்கு செல்லலாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் சுறுசுறுப்பு
இதையடுத்து கடந்த 45 நாட்களாக முடங்கியிருந்த ஐஸ் உற்பத்தி தொழில் மீண்டும் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் ஐஸ் தொழிற்சாலை நடத்தி வரும் ஜி. அருள்ராஜா கூறும்போது,
‘விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் ஐஸ் பார் தேவை குறைந்துவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலான ஐஸ் தொழிற்சாலைகளில் ஐஸ் உற்பத்தி நடைபெறவில்லை. தொழிற்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மட்டுமே கடந்த 45 நாட்களாக செய்தோம்.
நாட்டுப்படகு மீனவர்கள் தங்கு கடலுக்கு சென்றால் மட்டும் 5 ஐஸ் பார்களை வாங்குவார்கள், மேலும் ஜூஸ் கடைகள், கரும்புச்சாறு கடைகள் போன்றவற்றின் தேவைக்காக சில தொழிற்சாலைகளில் குறைந்த அளவிலேயே ஐஸ் பார்கள் தயாரிக்கப்பட்டன.
வெளிமாநில தொழிலாளர்கள்
ஐஸ் தொழிற்சாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களுடன் பீகார், அசாம், ஒரிசா போன்ற வெளிமாநில தொழிலாளர்களும் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தினமும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை சம்பளம் கொடுக்கப்படும்.
தற்போது வேலை இல்லை என்ற போதிலும் அவர்களை விட்டால் வேறு ஆட்கள் கிடைக்காது என்பதால் தினமும் ரூ. 200 வரை சம்பளம் கொடுத்து பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தினோம்.
தடைக்காலம் நாளையுடன் முடிவடைவதால் ஐஸ் தொழிற்சாலைகளில் ஐஸ் பார் உற்பத்திக்கான பணிகளை தொடங்கியுள்ளோம்’ என்றார் அவர்.