குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள், திசு வாழை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியப்படைந்தனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குன்னூரைச் சேர்ந்த கோபி என்பவர் நீலகிரியில் விளையும் அரிய வகைப் பழங்களை காட்சிக்கு வைத்திருந்தார்.
நோய்களுக்கு நிவாரணி
நான்கு அடி உயரம் மட்டுமே வளரும் மலை வாழை, காட்டு வேடன், வெள்ளரி, பன்னீர் கொய்யா, கலா, நகா, புணுகு, அத்தி, குரங்குப் பழம், ஆசீர்வாத் ஊசி, தவுட்டு, விழாத்திப் பழம், விக்கிப் பழம், பஞ்ச பாண்டவர், ஆப்பிள் நெல்லி, ரம்பூட்டான், துரியன் ஆகிய பழங்கள் சுவையாக இருப்பதோடு பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டவை. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, வயிற்று உபாதைகளுக்கு இந்த பழங்கள் நிவாரணியாக விளங்குகின்றன.
இந்த பழங்களின் பெயரை கேட்டு ஆச்சரியம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் அவற்றின் தோற்றத்தையும் கண்டு வியந்தனர். இந்த பழங்களின் தோற்றத்தைக் கண்டு சாப்பிடத் தயங்கிய சுற்றுலாப் பயணிகள் அவற்றின் சுவையை உணர்ந்தவுடன் அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
இதேபோன்று 2 கிலோ எடை கொண்ட கொய்யா மாதுளை, விதையில்லா திராட்சை ஆகிய பழங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
திசு வாழை
தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், தேனி, திருநெல்வேலி, மதுரை உள்பட 9 தோட்டக்கலை மாவட்டங்கள் சார் பில் பல்வேறு வகையான பழங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
தேனி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில், விவசாயி பால முருகன் என்பவர் பயிரிட்ட திசு வாழையை காட்சிப்படுத்தியிருத் தனர். இந்த வாழை சுற்றுலாப் பயணி களை வெகுவாகக் கவர்ந்தது.
ஒரு ஹெக்டரில் 165 டன் வாழையை திசு வளர்ப்பு மூலம் பாலமுருகன் மகசூல் செய்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையைப் பாராட்டி பஞ்சாப் மாநில அரசு ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த வாழைகளை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்