ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சென்னையில் விசாரணை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, இதுவரை ஆக்கப்பூர்வமான விசாரணையை தொடங்கவில்லை. மாறாக முக்கிய சாட்சியங்களை அழித்து, காவல்துறையினரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 20 தமிழர்கள் கொல்லப்பட்டது திட்டமிட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் கூறியுள்ளார். அவரது கருத்தை வலுப்படுத்துவதற்கான வாதத்தை வைப்பதன் மூலமே இந்த வழக்கில் நீதியைப் பெற முடியும்.
ஆந்திர காவல் துறையினரிடமிருந்து தப்பிய இளங்கோ, சேகர், பாலமுருகன் ஆகியோர் ஏற்கெனவே மனித உரிமை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினரும் வாக்குமூலம் அளித்தால் அவர்கள் தரப்பு வலுவடையும். இந்த 20 குடும்பங்களையும் டெல்லி அல்லது ஐதராபாத் அழைத்துச் சென்று வாக்குமூலம் அளிக்க வைப்பது சாத்தியமில்லாதது. எனவே, தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை சென்னையில் நடத்தினால் அவர்கள் தங்களது நியாயங்களை சொல்ல முடியும்.
தமிழகம் தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்து சென்னையில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் பலமுறை கடிதம் எழுதியும் தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே 20 தமிழர்கள் கொலை குறித்த விசாரணையை சென்னையில் நடத்த முடியும். எனவே, சென்னையில் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.