10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 2-வது ஆண்டாக நூறு சதவீத தேர்ச்சி பெற்று முட்டத்துவயல் ஆதிதிராவிட உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
கோவையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு முதல் 180 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நடப்பு ஆண்டில் 20 மாணவ, மாணவிகள் தேர்வை எதிர்கொண்டனர். இவர்களில் 18 பேர் மலைவாழ் பிரிவைச் சேர்ந்தவர்கள் 2 பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனையைத் தக்க வைத்துள்ளது இந்த பள்ளி. இப்பள்ளி மாணவி காயத்திரி 468 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் ஆசைத்தம்பி கூறியது:
பள்ளியில் மொத்தம் 6 ஆசிரியர்கள் இருக்கிறோம். 2-வது ஆண்டும் முழு தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதை நினைத்து தினமும் மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தினோம். மலைப்பிரதேசம் என்பதால் அதற்கு மேல் மாணவர்களுக்கு சொல்லித் தர முடியாது. காரணம், மாணவர்களும், ஆசிரியர்களும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். மாணவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
பள்ளியின் ஒரே சிக்கல் என்னவென்றால் மாணவ, மாணவிகளைத் தக்க வைப்பதுதான். திடீரென மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டால், நாங்களே அவர்கள் வீட்டுக்குச் சென்று காரணம் அறிந்து, கலந்தாய்வு கொடுத்து அழைத்து வருவோம். இங்குள்ள மக்களுக்கும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.
வேலைக்கு போய் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டும், பருவ வயது பிரச்சினை போன்ற காரணங்களால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் இடைநிறுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்சினைகளைக் களைய தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவுத்தம்பதி
மாவுத்தம்பதி ஆதிதிராவிட உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி 94.80 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளியில் 17 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இவர்களில் 16 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு இந்த பள்ளி நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.