தமிழகம்

234 தொகுதிகளிலும் மது ஒழிப்பை வலியுறுத்தி பிரச்சாரம்: சட்டப் பஞ்சாயத்து இயக்கம் முடிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவை தேர்தலின் போது 234 தொகுதிகளிலும் மது ஒழிப்பை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் அறிவித்துள்ளது.

மது ஒழிப்பு தொடர்பான சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் 2016 சட்டப் பேரவை தேர்தலின் போது, 234 தொகுதிகளிலும் மது ஒழிப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். அதன்படி, ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து மது ஒழிப்பு குறித்த அவர்களது நிலைப்பாட்டை கேட்டறியவுள்ளோம். பின்னர் மது ஒழிப்பை ஆதரிக்கிற கட்சி, மது ஒழிப்பை வெறுக்கிற கட்சி என்று ஒரு பட்டியலை தயார் செய்யவுள்ளோம்.

அதுமட்டுமின்றி. வீடு வீடாக சென்று மதுவிலக்கு குறித்த படிவத்தை விநியோகம் செய்ய வுள்ளோம். அந்த படிவத்தில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் மது ஒழிப்பு கோரி பொதுமக்கள் கையெழுத்து வாங்கலாம். இதுமட்டுமன்றி மது ஒழிப்புக்காக தனி பொது வாக்கெடுப்பையும் நடத்தவுள்ளோம்.

தமிழகத்தில் சேவை உரிமை சட்டத்தை கொண்டு வர வேண்டும், லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை சீர்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம் என்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.இளங்கோ, மாநில மது ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் அண்ணா துரை, செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து மது ஒழிப்பு குறித்த அவர்களது நிலைப்பாட்டை கேட்டறியவுள்ளோம். பின்னர் மது ஒழிப்பை ஆதரிக்கிற கட்சி, மது ஒழிப்பை வெறுக்கிற கட்சி என்று ஒரு பட்டியலை தயார் செய்யவுள்ளோம்.

SCROLL FOR NEXT