உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் அமைந் துள்ள கூத்தாண்டவர் கோயிலில் நேற்று காலை சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி ரகசியமாக வந்து ஜெயலலிதாவுக்காக அர்ச்சனை செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், அவர் வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி பல்வேறு கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதற்கிடையே, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி நேற்று காலை 7 மணிக்கு உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலுக்கு ரகசியமாக வந்தார்.
அவருடைய வருகை குறித்து உள்ளூர் போலீஸார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அமைச்சர் ஊரக தொழிற்துறை அமைச்சர் மோகன் மற்றும் ஆளுங்கட்சியினருக்கும் தெரியவில்லை. உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர் பகுதிகளில் நேற்று அமைச்சர் மோகனுடன் இணைந்து நலத்திட்ட விழாவில் பங்கேற்றும்கூட மோகனுக்கு அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கூத்தாண்டவர் கோயிலுக்கு சென்று ஜெயலலிதா விடுதலையாக வேண்டி அவரது படத்தை வைத்து சிறப்பு பூஜை நடத்துமாறு அங்குள்ள பூசாரி யிடம் கேட்டுக் கொண்டாராம். ஆனால், தற்போது கோயிலில் திருவிழா நடந்துள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை தர்மர் பட்டாபிஷேகம் முடிந்துள்ளதால் இன்னும் ஒரு வாரம் கழித்துதான் சிறப்பு பூஜை செய்ய முடியும்’ என்று அமைச்சர் வளர்மதியிடம் கோயில் பூசாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோயிலில் அர்ச்சனை மட்டும் செய்து விட்டு கூத்தாண்டவரை வணங்கிச் சென்றாராம் வளர்மதி.