மின் நுகர்வோர் மின் கட்டணத்தை ரூ.5 ஆயிரம் வரை ரொக்கமாக செலுத்தும் வகையிலும், காசோலை திரும்பி வந்தால் சேவைக் கட்டணத்துடன் மீண்டும் சலுகை அளிக்கவும் மின் வழங்கல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மின்சார வாரியத்தில் 1.72 கோடி வீட்டு மின் உபயோகம் உட்பட 2.52 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்புகளுக்கான கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மின்கட்டணம் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால் மின் கட்டணம் வசூலிக்கும் பல மையங்களில் ரொக்கமாக இல்லாமல் காசோலையாகவே பெறப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை அளிப்பதாக புகார்கள் எழுந்தன.
இதை ரூ.5000- ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மின்வழங்கல் விதித்தொகுப்பில் கட்டணத் தொகை மற்றும் காசோலை பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் விதமாக சில திருத்தங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கொண்டுவந்துள்ளது.
இதன்படி, தாழ்வழுத்த மின் நுகர்வோர், ரூ.2000த்துக்கு அதிகமாக செலுத்தும் கட்டணத் தை கேட்பு வரைவோலை அல்லது காசோலையாக செலுத்தவேண்டும் என்பது ரூ.5000த்துக்கு அதிகமாக செலுத்தும் கட்டணமாக திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சூழ்நிலையை பொறுத்து மின்சார வாரிய அதிகாரி கட்டணத் தொகையை ரொக்கமாகவும் ஏற்றுக் கொள்வதுடன், எதிர்காலத்தில் கேட்பு வரைவோலை அல்லது காசோலையாக செலுத்த நுகர்வோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோர் காசோலை அளித்து அது திரும்பி வந்தால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது குறித்த விதியிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நுகர்வோரால் வழங்கப்பட்ட காசோலை வேறு எந்தவிதமான காரணங்க ளுக்காகவும் திருப்பப்பட்டால் தாழ்வழுத்த நுகர்வோர் குறைந்த பட்சம் மூன்று பட்டியலிடல் காலங்களும் (மூன்று முறை), உயர் அழுத்த நுகர்வோர் மூன்று மாதங்களும் மின் கட்டணம் செலுத்தும் செயல்பாட்டை கண்காணித்து அதன்பின், அவரிடம் இருந்து நான்கு முறை காசோலையை ஏற்றுக் கொள்ளும்.
எனினும் காசோலை நிதியின்மை காரணத்தால் திருப்பப்படவில்லை என்றால், அடுத்தடுத்த செயல்பாடுகளை கண்காணிக்காமல் காசோலை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை மீண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்படுத்தி தரும் என கூறப்பட்டுள்ளது. திருத்தம் தொடர்பான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.