பொறியியல் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான (லேட்ரல் என்ட்ரி) விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. சென்னை தொழில்நுட்பக் கல்லூரி இயக்கக மையத்தில் முதல்நாளில் 505 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு பட்டய படிப்பு முடித்தவர்கள், நான்கு ஆண்டு கால பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைகழக வளாகத்துக்கு அருகில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி இயக்ககத்தில் விநியோகிக்கப்படுகின்றன.
மே 13-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை கிடைக்கும் இந்த விண்ணப்பங்களின் விலை ரூ.300 ஆகும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஜுன் இரண்டாம் வாரத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்முன் மாணவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் வழங்கப்படும்.