தமிழகத்தில் சமீபகாலமாக வளர்ப்பு யானைகள், கோயில் யானைகளின் முடிகளைக் கொண்டு மோதிரம் அணியும் விநோத பழக்கம் அதிகரித்துள்ளது. மோதிரம் அணிவதற்காக யானையின் முடியைப் பறித்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜாமீனில் வெளிவராத பிரிவில் கைது செய்ய தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 210 வளர்ப்பு யானைகள் உள்ளன. கோயில், மடங்களுக்கு சொந்தமாக 45 யானைகள் உள்ளன. இந்த யானைகளை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கும் வனத் துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. யானைகளுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுக்காமல், ஆதாயநோக்கில் அவற்றை துன்புறுத்துகின்றனர். 10 கி.மீ. தொலைவுக்கு மேல் நடத்தி அழைத்துச் சென்று யானைகளை பிச்சையெடுக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சமீபகாலமாக பொதுமக்களிடம் அதிர்ஷ்டத்துக்காக யானையின் முடியை பறித்து கைவிரல்களில் மோதிரம் சுற்றிப் போடும் விநோதம் அதிகரித்துள்ளது. தற்போது இந்த பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
அதற்காக, பாகன்கள் யானைகளை துன்புறுத்தி அவற்றின் முடிகளை எடுத்து பொதுமக்களுக்கு விற்கின்றனர். அதனால், தமிழகத்தில் பெரும்பாலான யானைகள் முடியில்லாமல் தனது கம்பீரமான அழகை இழந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கோயில் மற்றும் வளர்ப்பு யானைகளை லாரிகள் மூலமே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு முன் யானையின் எடை, உடல் நலத்தை கால்நடை மருத்துவரைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும். யானைகளைப் பராமரிக்க கூடாரம் அமைக்க வேண்டும். நேரத்துக்கு நேரம் தீனி போட வேண்டும். பிச்சை எடுக்க பயன்படுத்தக் கூடாது. அடித்து துன்புறுத்தக் கூடாது. அதன் உடல் உறுப்புகள், முடிகளை எடுக்கக்கூடாது.
தற்போது யானைகள் முடியை சுற்றி கை விரல்களில் மோதிரம் போட்டால் தொழில் பெருகும். அதிர்ஷ்டம் தேடிவரும் என்பன உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் மக்களிடம் அதிகரித்துள்ளன. முடியைப் பறிப்பது யானையை துன்புறுத்துவதற்கு சமம். யானைகளை துன்புறுத்துபவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் முடியை எடுத்தாலோ, அடித்து துன்புறுத்தினாலோ, பிச்சை எடுக்க வைத்தாலோ ஜாமீனில் வெளிவராத பிரிவுகளில் கைது செய்ய தமிழ்நாடு வனத்துறை உத்தரவிட்டுள்ளது என்றார்.