பெற்றோருக்கு உதவியாக பணம் சம்பாதித்துக் கொடுத்த திருச்செங்கோடு அரசுப் பள்ளி மாணவர் தினேஷ்ராஜா மற்றும் ராசிபுரம் பாச்சல் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். தமிழரசன் ஆகியோர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர். தினேஷ்ராஜா. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவர் ஆர். தினேஷ்ராஜா கூறுகையில், ‘திருச்செங்கோடு பட்டறைமேட்டில் வசிக்கிறேன். தந்தை எம். ராஜவேல் லாரி இருக்கைகளுக்கு சீட் தைக்கும் தொழில் செய்கிறார். அம்மா ஆர். ஜெயந்தி, தந்தையுடன் வேலை செய்கிறார். தம்பி ஹரிஹரன் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நாள்தோறும் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்த வேண்டும். அதனால், பள்ளி விடுமுறை நாட்களில் திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளியில் உள்ள பூங்காவில் டிக்கெட் விற்பனை செய்வேன்.
பெற்றோருக்கு உதவியாக அவ்வப்போது கடையில் பணிபுரி வேன். சராசாரியாக நாள்தோறும் மூன்று மணி நேரம் படிப்பேன். 495 மதிப்பெண் வாங்குவேன் என, எதிர்பார்த்தேன். ஆனால், 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இதற்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அளித்த ஊக்கம் தான் காரணம். அதிக மதிப்பெண் பெற பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தியது உதவியாக இருந்தது.
கணிதம் படித்து கணித ஆசிரிய ராக வேண்டும் என்பது எனது குறிக்கோள். படிப்பு தவிர, பள்ளியில் அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபடுவேன்’, என்றார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாச்சல் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். தமிழரசன். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 99, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100.
எஸ். தமிழரசன் கூறுகையில், ‘தந்தை வே.சக்திவேல் தறி ஓட்டும் கூலி வேலை செய்கிறார். அம்மா எஸ். அமுதா, தந்தைக்கு உதவியாக உள்ளார். தம்பி தினேஷ் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். நான் பாட்டி ஜெயலட்சுமி வீட்டில் தங்கி படிக்கிறேன். பள்ளி நேரம் போக வீட்டில் பெற்றோர் மற்றும் பாட்டிக்கு உதவியாக தறித்தொழிலில் ஈடுபடுவேன். மாநில அளவில் ரேங்க் பெற வேண்டும் என, நோக்கத்துடன் படித்தேன்.
அதற்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பாட்டி மற்றும் எனது மாமா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். இது மாநில அளவில் 3-ம் இடம் பிடிக்க உதவியாக இருந்தது. வீட்டில் வேலை முடிந்தடவுடன் இரவு 11 அல்லது 12 மணி வரை படிப்பேன். எதிர்காலத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள்’, என்றார்.
வேலைக்குச் சென்ற பெற்றோர்
மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவர் ஆர். தினேஷ்ராஜா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி ஆசிரியர்களுடன் வந்திருந்தார். பெற்றோர் எங்கே எனக் கேட்டபோது, கடையில் வேலையிருப்பதால் அவர்கள் வரவில்லை எனக் கூறினார். மகன் மாநில அளவில் சாதனை படைத்தபோதிலும், உழைத்தால் தான் உணவு என்பதால், தினேஷ்ராஜாவின் பெற்றோர் வேலைக்கு சென்றது, மகனின் மாநில சாதனைக்கு நிகரானது.