தமிழகம்

ஹெலிகாப்டரில் ஒன்றாகப் பயணித்து மகனுக்கு பயிற்சி அளித்த விமானப்படை தளபதி: தாம்பரம் பயிற்சி மையத்தில் முக்கிய நிகழ்வு

செய்திப்பிரிவு

தென்பிராந்திய விமானப்படைத் தளபதி, கடற்படையில் பணி யாற்றும் தனது மகனுக்கு சென்னையில் விமானப் பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சி, தாம்பரம் விமானப்படை பயிற்சி பள்ளி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இடம் பெற்றுள்ளது.

இந்திய விமானப்படையின் தென்பிராந்திய தளபதி அருண் புருஷோத்தம் கரூட்.

இவர் தனது பணிக்காலத்தில் 6 ஆயிரத்து 300 மணி நேரம் விமானத்தில் பறந்து முப்படை வீரர்களுக்கு விமானப் பயிற்சியை அளித்துள்ளார். 39 ஆண்டுகளாக விமானப் படையில் பணியாற்றும் இவர் வரும் மே 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இவரது மகன் அபிஜித் கரூட் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்போது, இவர் தாம்பரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் விமானப் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த விமானப்படையின் தென்பிராந்திய தளபதி அருண் புருஷோத்தம் தனது மகனான அபிஜித்துக்கு தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சி அளித்தார்.

இந்திய விமானப் படையின் ‘சேட்டக்’ ஹெலிகாப்டரில் விண்ணில் பறந்து ஒருமணி நேரம் தனது மகனுக்கு விமானப் பயிற்சி அளித்தார்.

அப்போது, ஆபத்துக் காலங்களில் விமானத்தை எப்படி இயக்குவது என்பது உள்ளிட்ட உத்திகள் குறித்து விளக்கினார். முன்னதாக, தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தளபதி அருண் புருஷோத்தமுக்கு விளக்கப்பட்டது.

விமானப் படை தளபதி தனது மகனுக்கு பயிற்சி அளித்த நிகழ்ச்சி, இப்பயிற்சிப் பள்ளி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப் படுகிறது.

SCROLL FOR NEXT