சென்னை: நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலும் விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர். 8-வது நாளாக நேற்றும் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
நேற்று அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்கள், வருகை தரவிருந்த 23 விமானங்கள் என மொத்தம் 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், புவனேஸ்வர், பாட்னா, ஜெய்ப்பூர், கோவை ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடியவை. இன்று (டிச.10) முதல் பிரச்சினை குறையத் தொடங்கி, விமான சேவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கட்டணம் நிர்ணயம்: இதற்கிடையே, இண்டிகோ விமானங்கள் அதிக அளவில் ரத்து செய்யப்படுவதால், மற்ற விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்தது.
விமான போக்குவரத்து துறை இயக்கு நரகம், கட்டணங்கள் உயர்த்துவதற்கு உச்ச வரம்பு நிர்ணயித்ததைத் தொடர்ந்து, விமான டிக்கெட் கட்டண உயர்வு குறைந்துள்ளது.