கர்நாடகாவில் பந்த் எதிரொலியாக, தமிழக பேருந்துகள் மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்னுமிடத்தில், கர்நாடகா அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு அணைகள் கட்டினால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் குடிநீர் பிரச்சனை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறி கடந்த மாதம் தமிழக விவசாயி அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் கடந்த மாதம் 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்த கன்னட அமைப்புகள், மேகேதாட்டு அணை கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசைக் கண்டித்து, முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தன.
இந்த போராட்டத்திற்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தின் போது, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உருவபொம்மை எரிப்பு, சாலைமறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளி பகுதியில் தமிழக & கர்நாடக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் தலைமையில் ஏஎஸ்பி ஆறுமுகச்சாமி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட 350 போலீஸார் பாதுகாப்புப் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர்
பேருந்து நிறுத்தம்
கர்நாடகாவில் பந்த் காரணமாக நள்ளிரவு முதல் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டது. அதன்படி கர்நாடகா செல்லகூடிய 720 பேருந்துகளும் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தபட்டன. இதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சுமார் 500 கர்நாடகா பேருந்துகள் அம்மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பதற்றம்
அத்திப்பள்ளி பகுதியில் கன்னட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது