தமிழகம்

விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வு ஏப். 8-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் கூறியதாவது:

2015-16-ம் ஆண்டுக்கான பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோ-டெக்னாலஜி, பயோ-இம் பர்மேஷன் உள்ளிட்ட 15 பொறியியல் பட்டப்படிப்புகள், சென்னை விஐடி வளாகத்தில் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் ஆகிய பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது.

இதற்காக துபாய், குவைத் மற்றும் இந்தியாவில் 31 மாநிலங்களில் 112 முக்கிய நகரங்களில் 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 302 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கும் நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் 19-ம் தேதி வரை அந்தந்த மையங்களில் நடக்கிறது.

நுழைவுத் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு ரேங்க் அடிப்படையில், பி.டெக். பட்டப்படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் மே 11-ம் தேதி முதல் நடைபெறும்.

மேலும் விஐடி பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ‘ஜிவி’ பள்ளி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலை இறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலை.யில் சேரும்போது அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்குகான கல்விக் கட்டணத்தில் முழுமையாக சலுகைகள் வழங்கப்படும்.

அதேபோல், நுழைவுத் தேர்வில் 1 முதல் 50 வரை ரேங்க் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 75 சதவீதம் கல்விக் கட்டண சலுகையும், 51 முதல் 100 வரை ரேங்க் பெறுபவர்களுக்கு 50 சதவீதம் சலுகையும், 101 முதல் ஆயிரம் வரை ரேங்க் பெறுபவர்களுக்கு 25 சதவீதம் கல்விக்கட்டண சலுகையும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் விஐடியில் இலவசமாக உயர்கல்வி பயிலுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மேல்நிலைத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு இலவச அட்மிஷன் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT