திருச்சியில் இருந்து குஜராத்துக்கு கடத்தப்பட்ட மேலும் ஒரு சிறுவனை போலீஸார் மீட்டுள்ளனர். குழந்தைக் கடத்தலில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கக்கன் காலனி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து சிறுவர்களைக் கடத்தியும், வறுமையில் வாடும் ஏழை பெற்றோர்களிடம், ஆசைவார்த்தை கூறி சொற்ப தொகையைக் கொடுத்து சிறுவர்களை விலைக்கு வாங்கியும், குஜராத் மாநிலத்தில் திருட்டு தொழிலுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், சிலரிடம் விற்றுள்ளனர்.
இது தொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து திருவெறும்பூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கடந்த ஒன்றரை மாதத்தில், சிறுவர்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த திருவெறும்பூர் காந்தி நகர் ரஜினி(37), அர்ஜூனன்(30), விஜய், முரளி, மதன்குமார், கக்கன் காலனி சுப்பிரமணி(39), பாரதிபுரம் முத்துக்குமார் மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் வாஞ்சி நகரத்தைச் சேர்ந்த அழகர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த திருவெறும்பூரைச் சேர்ந்த மோகன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலையடுத்து குஜராத்தில் விற்கப்பட்ட 6 சிறுவர்களை போலீஸார் மீட்டு, அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீஸாரால் ஏற்கெனவே கும்பகோணம் மேலக்காவேரி விஜய்(14), நாகை அக்கரைப்பேட்டை மகேஷ்(4), திருச்சி எஸ்.கண்ணனூர் யூனிஸ்கான்(9), திருப்பூர் மாரிமுத்து(13), திருச்சி காட்டூர் மணிகண்டன்(10), திருச்சி துவாக்குடி தெற்குமலை முருகன்(5) ஆகியோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மோகன் அளித்த தகவலின்பேரில் குஜராத் மாநிலம், சூரத் சென்ற போலீஸார் மேலும் ஒரு சிறுவனை மீட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுவனையும், ஏற்கெனவே மீட்கப்பட்ட துவாக்குடி தெற்குமலை முருகனையும் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையே, குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் 7 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். திருவெறும்பூரைச் சேர்ந்த அவர்கள் விவரம்: கணேசன்(53), இவரது மனைவி முனியம்மாள் என்கிற சரோஜா(50), மருமகள் கன்னித்தமிழ்(26), கார்த்திக்(28), இவரது மனைவி காயத்ரி(26), அருண்குமார்(37), சிவா(21). தெற்குமலை முருகன் உட்பட 2 சிறுவர்களை கடத்தி குஜராத்தில் விற்ற வழக்கில் போலீஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.