தமிழகம்

மணல் கடத்தல் வழக்கில் ஆள் மாறாட்டம்: 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் மணல் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபடுவதற்கு துணைபுரிந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மணல் குவாரிகளிலிருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட லாரிகளில், கிருஷ்ணகிரி மாவட்டம் வரை அனுமதி பெற்றுவிட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு மணல் கடத்திச் செல்லும் சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது.

இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், மணல் கடத்தலை கட்டுபடுத்த முடியவில்லை.

குறிப்பாக போலீஸார் சிலர் மணல் கடத்தலுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாகவே மணல் கடத்தலை தடுக்க முடியாமல் வருவாய்த்துறை, போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீஸார் காளிங்காவரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரி போலீஸார் மீது மோதுவது போல் வந்தது. அதிர்ச்சியடைந்த போலீஸார், லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், பேரிகை அருகே உள்ள கொளதாசபுரத்தை சேர்ந்த முருகேசன், அரியலூர் சரவணன், தஞ்சாவூர் மாவட்டம் இளையங்குடியைச் சேர்ந்த செல்லப்பன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் முதல் குற்றவாளியான கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீஸார் கைது செய்யாமல் இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து எப்ஐஆரில் ரமேஷின் பெயரை எடுத்துவிட்டு, அதற்கு மாற்றாக சூளகிரி அருகே உள்ள குட்டலப்பள்ளியைச் சேர்ந்த லோகேஷ் என்பவரை வழக்கில் சேர்த்துள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் எஸ்பி கண்ணம்மாள் போலீஸாரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குற்றவாளியை தப்பி வைக்க ஆள் மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இச்சம்பவத்தில் ஆள் மாறாட்டத்திற்கு காரணமான எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் இவ்வழக்கை சரியாக விசாரணை நடத்தாத இன்ஸ்பெக்டர் சுபாஷ் உள்ளிட்ட 2 பேரையும் தற்காலி பணிநீக்கம் செய்ய, எஸ்பி கண்ணம்மாள், கோவை மேற்கு மண்டல ஐஜி சங்கருக்கு பரிந்துரை செய்தார்.

அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சம்பவம் மணல் கடத்தலுக்கு உதவும் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT