தனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்கள் என்று மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரது மகன் துரை வையாபுரி, விருதுநகர் தொகுதி முழுவதும் கிராம மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்க மதிமுகவில் சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டது.
வியாழக்கிழமை நடந்த உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், துரை வையாபுரிக்கு கட்சிப் பதவி வழங்குவது குறித்து, ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது துரைக்கு எந்தப் பதவியும் வழங்கத் தேவையில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
துரை வையாபுரி தனது வணிகத்தில் முழுக்கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இல்லை. தந்தை (வைகோ) தேர்தலில் போட்டியிட்டதற்காக மகன் என்ற முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அவர் மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்துக்கு இதுவரை 2 முறை மட்டுமே அங்கு வந்துள்ளார். செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல்.கணேசன் ஆகியோர் மதிமுகவிலிருந்து வெளியேறியபோது, மதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடந்தது. அப்போது கட்சி அலுவலகத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மதிமுக நிர்வாகிகள், தாயகத்துக்கு வந்து நின்றனர். அப்போது, துரை வையாபுரியும் வந்து நின்றார். இதேபோல், வைகோவின் தம்பி ரவி அண்ணாச்சி என்ற ரவிச்சந்திரனும் மதிமுக கட்சி அலுவலகத்துக்கு வருவதில்லை.
எனவே, தனது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும், எந்தக் காலத்திலும் பதவி அளிக்கப் போவதில்லை என்பதில் தான் உறுதியாக இருப்பதாக, வைகோ, தன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.