தமிழகம்

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்புப் பணியில் 13 லட்சம் பேரின் தகவல்கள் ஒருங்கிணைப்பு: சந்தீப் சக்சேனா தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆதார் - வாக்காளர் அட்டை தகவல்களை இணைக்கும் பணி மே மாத இறுதிக்குள் முடிவடையும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இதுவரை 13 லட்சம் பேரின் தகவல்கள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் இணைப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வாக்காளர் அட்டை விவரங்களைக் கொண்ட, பிரத்யேக விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவத்துடன், வாக்குச்சாவடி அலுவலர் வீடு வீடாக செல்வார். படிவத்தை வாக்காளரிடம் வழங்கி, அதில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுமாறு கூறுவார்.

திருத்தம், புகைப்பட மாற்றம், பெயர் நீக்கம் அல்லது முகவரி மாற்றம் போன்றவை இருப்பின், அதற்கான விண்ணப்பப் படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்து பெறுவார். மேலும், ஆதார் அட்டை இருந்தால், அதன் நகலைப் பெற்று விண்ணப்பப் படிவத்தில் தகவல்களை குறித்துக் கொள்வார்.

ஆதார் இல்லாவிடில், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும்போது அளிக்கும் இஐடி எண், மொபைல் போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை குறித்துக்கொண்டு வாக்காளரிடம் கையொப்பம் பெறுவார்.

இந்தத் தகவல்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரிகள் இந்தத் தகவல்கள் முழுவதையும் ஒருங்கிணைப்பு செய்வர். ‘தகவல் பெற்று பதிவு செய்தல், ஒருங்கிணைத்து பதிதல், இணைத்தல்’ என்ற அடிப்படையில் இந்தப் பணி நடக்கிறது.

ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை தகவல்கள் ஒருங்கிணைப்புப் பணிக்கு தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தகவல்கள் ஒன்றாக இருப்பின் அவை இணைக்கப்படும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்திருப்பின் அந்தத் தகவல் எங்களுக்கு வரும். அதை வாக்காளர்களிடம் உறுதி செய்து மாற்றுவோம். இல்லையெனில் காத்திருப்போம்.

இதன்மூலம் போலி வாக்காளர் அட்டைகளை நீக்க முடியும். தமிழகம் முழுவதும் பெரும்பாலான வாக்காளர்களின் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 13 லட்சம் பேரின் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்புப் பணிகள் முடிந்துள்ளன. மே 31-ம் தேதிக்குள் இந்தப் பணிகள் முழுமையாக முடியும்.

வாக்காளர்கள் விவரங்கள், ஏற்கெனவே மாவட்ட அளவிலான தகவல் தொகுப்பாக உள்ளது. தற்போது, 32 மாவட்ட வாக்காளர்களின் தகவல்களையும் ஒரே தகவல் தொகுப்பின் கீழ் கொண்டு வரும் பணியும் நடந்துவருகிறது.

இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT