மலையாளப் புத்தாண்டு தினமான ‘விஷு’ பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு தினமான ‘விஷு’ திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள். மலையாள மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விஷு. இந்நாளில் தங்கள் இல்லங்களில் அரிசி, காய்கனிகள், வெற்றிலை பாக்கு, கண்ணாடி, கொன்றை மலர், தங்க நாணயங்கள், புத்தாடை ஆகியவற்றைக் கொண்டு ‘விஷுக்கனி’ அலங்கரிப்பார்கள். அதிகாலை எழுந்ததும் இந்த விஷுக்கனியை முதலில் கண்டு, புலரும் புத்தாண்டில் இறைவனை வழிபடுவார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை வணங்கி ஆசி பெறும் இளையவர்கள், குழந்தைகள் ‘விஷு கைநீட்டம்’ எனும் பணப் பரிசையும் பெற்று மகிழ்வார்கள்.
மலையாள மொழி பேசும் மக்களுக்கு இந்த புத்தாண்டு எல்லா வகையிலும் ஏற்றம் தரும் ஆண்டாக மலரட்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.