சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனந்தராமன். வெள்ளி நகைக் கடை வைத்துள்ள இவர், நகைகளை தயாரித்து மற்ற கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதில் வசூலாகும் பணத்தை இவரது கடை ஊழியர்கள் தினமும் வங்கியில் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை இவரது கடை ஊழியர்களான பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பாபு, பட்டைக்கோயில் ராமாச்சாரி ஆகியோர், ரூ. 12.50 லட்சத்தை 2 வங்கிகளில் செலுத்தும் வகையில் ரூ. 8 லட்சம், ரூ. 4.50 லட்சம் என இரண்டு பைகளில் எடுத்துக் கொண்டு பைக்கில் புறப்பட்டனர்.
தேவாங்கம் பிள்ளையார் கோயில் தெருவில் சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்தது. இதைய டுத்து, பைக்கை நிறுத்தியபோது, அந்தக் கும்பலில் இருந்த 2 பேர் திடீரென மிளகாய் பொடியை நகைக் கடை ஊழியர்கள் மீது தூவினர். இதில் அதிர்ச்சியடைந்து ஊழியர்கள் இருவரும் கீழே விழுந்தபோது, ரூ. 4.50 லட்சம் இருந்த பணப்பையை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டு தப்பிவிட்டது.அனந்தராமன் கொடுத்த புகாரின்பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சம்பவம் நேரிட்ட இடத்துக்கு அருகேயுள்ள வீடு மற்றும் கடைகளில் பொருத் தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளை அனந்தராமனுக்கு போலீஸார் காட்டியபோது, வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நகைக் கடையின் முன்னாள் ஊழியர் என்பது தெரிந்தது.
சிவதாபுரம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனந்தராமனிடம் வேலை கேட்டுள் ளார். அனந்தராமன் வேலை கொடுக்க மறுத்து விட்டாராம். இதனால், அவர் தனது நண்பர் களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்து இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.