தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும், கரும்புக்கான கொள்முதல் விலையான ரூ.2 ,650-ஐ உடனடியாக வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் நிலங்களை ஜப்தி செய்யக்கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 31-ம் தேதி(நேற்று) சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக திருச்சியில் செயல்பட்டுவரும் நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று காலையில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தலைமை செயலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் சங்கத்தினர் தங்களது சட்டைகளை கழற்றி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீஸார் அனைவரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி ஜாம்பஜாரில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "போராட்டத்தில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் டிக்கெட் பதிவு செய்திருந்தோம். ஆனால் திருச்சியில் வைத்தே போலீஸார் எங்களை தடுத்து நிறுத்தி, டிக்கெட்டை பிடுங்கிக் கொண்டனர். பலரை திருச்சியிலேயே கைது செய்து விட்டனர். அதிலிருந்து தப்பித்தவர்கள் தனித்தனியாக பேருந்துகளில் ஏறி சென்னை வந்து தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றோம்" என்றார்.