கொடைக்கானலில் 53-வது கோடை விழா மலர் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இக்கண்காட்சி ஜூன் 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோடைவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு 53-வது கோடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில் நடபெறும் இவ்விழாவில் மலர்கள், பழங்கள் மற்றும் காய்கனிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த மலர் சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
56 வகையான மலர்கள், காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பல்வேறு உருவ வேலைப்பாடுகளுடன் கூடிய விலங்குகள், பறவைகள் மற்றும் அலங்கார வளைவுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தன. இதில், தேனி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறிகள், பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்பைடர்மேன் உருவம் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
மதுரை மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் பூக்களால் அமைக்கப்பட்ட அழகர் குதிரையில் வைகை ஆற்றில் இறங்கும் காட்சி, இந்திரனின் யானை, மனித தலையும் குதிரை உடலும் உடைய நார்னியா குதிரை போன்றவற்றை பார்த்து குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் குதூகலமடைந்தனர்.
தேனி மாவட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முல்லைப் பெரியாறு அணை, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறையினர் அரிய வகை மலர்கள், காய்கறிகளைக் கொண்டு அமைத்திருந்த வெவ்வெறு வகையான மலர்கள், காய்கனி அலங்காரங்கள் பலரை ரசிக்க வைத்தது.
கண்காட்சியை பார்வையிட ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் பிரையண்ட் பூங்காவில் குவிந்தனர்.
பூங்காவில், சிட்டுக்குருவி, சிங்க முகம் மற்றும் தவளை உள்ளிட்ட உருவங்களை கொண்ட மலர்கள், ரோஜா மலர்கள் பூத்து குலுங்கியது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. சுற்றுலாப் பயணிகள், மலர்கள் மற்றும் காய்கறி பிரமிடுகள் அருகே நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மழை பெய்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யவில்லை. இதனால் நகரில் சீதோஷண நிலை “குளுகுளு”வென இருந்ததால் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
முன்னதாக மலர் கண்காட்சியை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆட்சியர் ந. வெங்கடாசலம் ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
கொடைக்கானல் மலர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மலர் சிற்பங்கள்: 1. இந்திரனின் வெள்ளை யானை. 2. மனித தலையும் குதிரை உடலும் கொண்ட வடிவம். 3. பூக்களால் வடிவமைக்கப்பட்ட கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் மாதிரி வடிவம். 4. குழந்தைகளைக் கவர்ந்த காய்கறிகள் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்பைடர் மேன். படங்கள்: ஒய்.ஆண்டனி செல்வராஜ்
உதகையில் நிறைவு
உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் 118-வது மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. மூன்று நாள் நடைபெற்ற கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். இக்கண்காட்சியில் 50,000 ரோஜா மலர்களால் மோனோ ரயில், 6 ஆயிரம் ஜெர்பரா மலர்களால் தோடர் இன மக்களின் குடில் வடிவமைக்கப்பட்டிருந்தன. நிறைவு விழாவில் வேளாண் உற்பத்தி ஆணையர் சந்திப் சக்சேனா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கினார்.