தமிழகம்

சென்னை சாலைகளை ரூ. 451 கோடியில் மேம்படுத்த மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

சென்னையின் சாலைகளை மேம்படுத்த ரூ.451 கோடியில் சென்னை மாநகராட்சி திட்டம் தீட்டி வருகிறது.

சென்னை சாலைகளில் சில மணி நேரங்கள் மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக போடப்பட்ட உட்புறச் சாலைகள் சில மாதங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. எனவே பிரதான சாலைகளையும், உட்புறச் சாலைகளையும் மேம்படுத்த புதிய திட்டங்களை சென்னை மாநகராட்சி வகுத்து வருகிறது.

சென்னையில் உள்ள 471 பேருந்து தட சாலைகளில் 194 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை மேம்படுத்தும் பணிகள் ரூ.451 கோடி செலவில் விரைவில் தொடங்கவுள்ளன. இந்த முறை போடப்படும் சாலைகள், இந்திய சாலை காங்கிரஸ் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதில் மாநகராட்சி கவனமாக உள்ளது. எனவே, தார் கலவை தயாரிக்கும் மையத்தை கண்காணிப்பது, சாலை போடப்படும்போது தரமான கலவை பயன்படுத்தப்படுகிறதா, சரியான உயரத்துக்கு போடப்படுகிறதா என்பதை கண்காணிக்க பிரத்யேகமாக 60 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 33 ஆயிரம் சாலைகளில் 5 ஆயிரம் உட்புறச் சாலைகளை ரூ.700 கோடியில் மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதான சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கான நிதியில் பெருமளவை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள் ளது. உட்புறச் சாலை திட்டத்துக்கான நிதியை கடனுதவி நிறுவனங்களிடமிருந்து பெறுவோம். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் முன் சென்னை சாலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது பிரதான நோக்கமாக இருந்தாலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வது எங்கள் எண்ணமாகும்” என்றார்.

SCROLL FOR NEXT