ஆட்டோ மீட்டர் கட்டண முறையை தீவிரமாக அமல்படுத்தவும், இருக்கை மாற்றம் செய்து 3-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களின் உரி மத்தை ரத்து செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எம்.அழகர்சாமி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயத்தை பின்பற்றி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 (1.8 கி.மீ. தூரத்துக்கு), அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.12, காத்திருப்பு கட்டணம் ரூ.3.50 (5 நிமிடம்), இரவில் (11 மணி முதல் அதிகாலை 5 வரை) 50 சதவீத கட்டணம் நிர்ணயம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
சாதாரண ஆட்டோக்களுக்கும், 3-க்கும் மேற்பட்ட பயணி களை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்களுக்கும் பாகுபாடு பார்க்கப்படுகிறது. அனைத்து ஆட் டோக்களிலும் 3 பயணிகளைத் தான் ஏற்றிச்செல்ல வேண்டும். ஆனால், ஆட்டோக்களில் 10-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச்செல்கின் றனர். விருப்பம்போல் கட்டணம் வசூல் செய்கின்றனர். அரசின் கட்டண நிர்ணய உத்தரவு அனைத்து ஆட்டோக்களுக்கும் பொருந்தும்.
எனவே, ஆட்டோ கட்டண முறை அமல்படுத்தப்படுவது குறித்து அதிகாரிகள் சிறப்புக்குழு அமைத்து ஆய்வு நடத்தவும், ஷேர் ஆட் டோக்கள் உட்பட அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத் தப்பட்டுள்ளதா, மீட்டர் கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்ப தைக் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் நேரில் ஆஜரானர். அவர் கூறும் போது, மதுரையில் 50 ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அதில் 40 ஷேர் ஆட்டோக்களுக்கான உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. தற்போது 10 ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்த ஆட்டோக்களில் 5-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லலாம். பிற ஆட்டோக்களில் 3 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால் அந்த ஆட்டோக்களில் இருக்கை மாற்றம் செய்து 3-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். அவ்வாறு செயல்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.
இதையடுத்து, ஆட்டோ மீட்டர் கட்டண முறையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இருக்கை மாற்றம் செய்து 3 பேருக்குப் பதிலாக அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்களின் உரிமத்தை (தகுதிச்சான்று) ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்களின் விதிமீறல்களை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து 3 மாதத்துக்கு ஒருமுறை அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.