விரிவுரையாளர் பணிக்கு பார்வையற்றோரை நியமிப்பது தொடர்பான வழக்கு பதில் மனுவில் தெரிவித்த கருத்துக்காக, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். இதையடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஆசிரியர்கள் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (டிடிஇஆர்டி), மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டிஐஇடி) விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக 6-10-2009 அன்று விளம்பரம் வெளியிட்டது. அதில் பார்வையிழந்த, காதுகேளா தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. மேலும், மாற்றுத்திறனாளிகள் சட்டப்பிரிவு 33-க்கு எதிரானது. எனவே, மொத்த காலியிடத்தில் 1 சதவீதத்தை காது கேளாத, பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கி வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களை விரிவுரையாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். அந்த மாணவர்கள் வகுப்புகள் எடுக்கும் விதம், அவர்களின் உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றை இவர்கள் மதிப்பிட வேண்டும். ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களின் கற்பித்தல் திறனை பார்வையற்றோர், காது கேளாதோர் மதிப்பிடுவது கடினம். இதனால், உடலில் குறைபாடு இல்லாத சராசரி நபர்களே இந்தப் பணியை நன்றாக செய்ய முடியும்’ என கூறப்பட்டிருந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், பள்ளிக் கல்வித்துறைச் முதன்மை செயலாளர் சபிதாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் டி.சபிதா, நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2009-ம் ஆண்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதில், பார்வையற்றோர், காது கேளா தவர்களுக்கென தனி அரசாணை வெளியிடப்படவில்லை. அதனால், பார்வையற்றோர், காதுகேளாதவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள் இல்லை என ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் அளித்த விளக்கத்தின்படி நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது.
இவை அனைத்தும் எனது பார்வைக்குத் தெரியாமல் நடந்து விட்டது. இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். 2008-09-ம் ஆண்டில் மொத்தம் 156 காலிப் பணியிடங்களுக்கான அறி விப்பாணை வெளியிடப்பட்டது. அதில், பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு, 2013-14ல் 53 காலிப் பணியிடங்களும், 2014-15-ம் ஆண்டு 30 காலிப் பணியிடங்களும் அரசால் அறிவிக்கப்பட்டன. இவற்றில், பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் ஒரு இடமும், நிலுவை பணியிடங்களில் 2 இடங்களும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடந்த முறை தாக்கல் செய்த பதில் மனுவுக்காக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி யுள்ளார். மேலும், பார்வையற் றோருக்கான இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் செய்யப்படும் என உறுதியும் அளித்துள்ளார். இதனால், இவ்வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வழக்கு விசாரணையை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.