திருட்டு குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2006 அக். 4-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் திருட்டு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, அக். 20-ம் தேதி உயிரிழந்தார்.
சிறையில் உடல் நலமின்றி இருந்தபோது, காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், தலைமைக் காவலர்கள் சின்னசாமி, லோகநாதன் ஆகியோர், தன்னை அடித்துத் துன்புறுத்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சிறைத் துறை அதிகாரிகளிடம் ராமச்சந்திரன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அவர் இறந்த பிறகு, திருச்சி கே.கே.நகர் போலீஸார் சிவசுப்பிரமணியன், சின்னசாமி, லோகநாதன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, தற்போது பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சிவசுப்பிரமணியன், பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூரில் எஸ்.எஸ்.ஐ-ஆக பணியாற்றி வரும் சின்னசாமி, அரியலூரில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. லோகநாதன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.