ஊத்தங்கரை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோர மரத்தில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரியமணிக்குப்பம் அடுத்த ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (55). வேளாண் கூட்டுறவு சங்கத்தில் காசாளராகபணியாற்றி வந்தார். இவரது மனைவி ரெஜினாமேரி (42). ரெட்டி வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஜோயல்(7), மகள் ஜெனிதா(5). திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள இவர்களது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வில்சன் நேற்று அதிகாலை குடும்பத்துடன் காரில் புறப்பட்டார்.
இவர்களுடன், வில்சனின் தாயார் ஓய்வுபெற்ற ஆசிரியை சுசீலா (70), அக்கா செல்வி (56, அங்கன்வாடி ஊழியர்), தங்கை ஜாய்சி (48) ஆகியோரும் சென்றுள்ளனர். காரை சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (28) என்பவர் ஓட்டிச் சென்றார்.
திருப்பத்தூர் - சிங்காரப்பேட்டை சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் நாற்சாம்பட்டி பகுதியில் உள்ள குரங்குக்கல்மேடு என்னுமிடத்தில் அதிகாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஆலமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வில்சன், ரெஜினாமேரி, குழந்தைகள் ஜோயல், ஜெனிதா மற்றும் சுசீலா, ஜாய்சி, செல்வி ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓட்டுநர் திலீப்குமார் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஊத்தங்கரை டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் குமரன், அருள்முருகன் மற்றும் போலீஸார் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.