தமிழகம்

10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்தார் விஜயகாந்த்

செய்திப்பிரிவு

திமுக உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து காவிரியில் அணை கட்டுவதை தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்தார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர் களை நேற்று முன்தினம் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

பிரதமரை சந்திப்பதற்காக விஜயகாந்த் நேற்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், ஊடக பொறுப்பாளர் கோபண்ணா, தமாகா சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்ர மணியம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் சார்பில் விஜயகுமார் ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் தனித்தனியாக டெல்லி சென்றனர்.

அங்கு விஜயகாந்த் தலைமையில் அனைவரும் ஒன்றாக இணைந்து நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். தமிழக குழுவினருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் சென்றிருந்தார். அப்போது, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ‘காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட பிரச்சினை களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

பிரதமரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறினார். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பேசுவதாகவும் தெரிவித்தார். ‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் பாதிப்பு வராது. தனியார் யாரும் நிலத்தை கைப்பற்ற மாட்டார்கள். நிலத்தை அரசுதான் கையகப்படுத்தும். அந்த நிலங்களில் அரசு மருத்துவமனைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்படும்’ என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

மேலும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் என்றும் கூறினார். பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை. தமிழகத்துக்கு நல்லது செய்வதாக பிரதமர் உறுதியளித்தார். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

ஆவேசமான விஜயகாந்த்

செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், ஆரம்பத்திலேயே ‘அரசியல் குறித்து பேச வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபர் அரசியல் தொடர்பாக கேள்வி எழுப்பவே, அவரிடம் விஜயகாந்த் எதிர்கேள்வி எழுப்பினார். அந்த நிருபருக்கு ஆதரவாக மற்றொரு நிருபரும் பேசவே, விஜயகாந்த் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து விஜயகாந்தை கையைப் பிடித்து இழுத்து திருச்சி சிவா சமாதானப்படுத்தினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகமாகவே, விஜயகாந்த் அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றார். மற்ற கட்சியினர் சமாதானப்படுத்தியதன் பேரில் தொடர்ந்து பேட்டியளித்தார்.

SCROLL FOR NEXT