வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பெ.தமயந்தி, தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பெருமளவு பணத்தை லஞ்சமாக வழங்கியுள்ளன. ஆளும்கட்சியான அதிமுக சுமார் 60 சதவீத வாக்காளர்களுக்கு தலா ரூ.200 வீதம் வழங்கியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த, இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமையை சரி செய்ய முடியும். எனவே, 39 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் போன்ற முறைகேடுகளைத் தடுத்திடும் வகையில் போதுமான ஏற்பாடுகளை செய்த பின்னர், மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தமயந்தி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிகுமார், டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மனுதாரரின் பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.