தமிழகம்

கூட்டணிக்கு அச்சாரமா விஜயகாந்த் சந்திப்பு?- கருணாநிதி பதில்

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமா என்பதை இப்போதே உறுதிப்படுத்த முடியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த செய்தியாளர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, "மேகேதாட்டு பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முயற்சி பாராட்டுக்குரியது.

ஆனால், நேற்றைய சந்திப்பு 2016 தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமா என்றால் அதை இப்போதே சொல்ல முடியாது. இருப்பினும், தமிழகம் இப்போது இருக்கும் சூழலில் தமிழகத்தை மீட்டெடுக்க ஒரு கூட்டணி தேவைப்படுகிறது. அந்த வகையில், தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது தமிழகத்துக்கு தேவைப்படும் கூட்டணியாக இருந்தால் அதை நாங்கள் பரிசீலிப்போம்" என்றார்.

இது சம்மந்தமான கேள்விக்கு நேற்று பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "விஜயகாந்த் சந்தித்த கட்சிகள் ஓரணிக்குள் வருவது சாத்தியமில்லை" எனக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

முன்னதாக நேற்று, திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார்.

சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, "மேகேதாட்டுவில் கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவது, நிலம் கையகப்படுத்துதல் சட்டம், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் இருந்தால் தமிழகத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். எனவே, மற்ற கட்சித் தலைவர்களை அழைப்பதற்காக சந்தித்தேன்" எனக் கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT