கோப்புப் படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எண்ணிக்கைக்கேற்ப நேற்று கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொகுதிவாரியாக பிரித்து அனுப்பப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொங்கியது. ஏப்.6-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
7-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,139 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முறையாக பூர்த்தி செய்யப்படாத 2,460 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப் பெற கடந்த ஏப்.9-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. அன்றே வேட்பாளர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது. அதன்படி, தமிழக தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 193 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சென்னையில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 47 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக சைதாப்பேட்டையில் 15 பேரும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர் எண்ணிக்கை உறுதியானதைத் தொடர்ந்து, கூடுதலாக தேவைப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தத்த மாவட்ட அளவில் நேற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இணையவழி குலுக்கல் மூலம் தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு, ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களோடு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.