பத்து மாதம் பெண் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த ஊக்கை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டாக் டர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள மடத்துக்குப்பத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களின் 10 மாத பெண் குழந்தை ஸ்ரீதிவ்யா. கடந்த 24-ம் தேதி கோகிலா குழந்தையை மடியில் படுக்க வைத்து பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. மீண்டும் மின்சாரம் வந்தபோது குழந்தை விடாமல் அழுதுகொண்டிருந்தது. மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோகிலா குழந்தையின் வாயில் விரலை விட்டு பார்த்தார். அப்போது வாயின் உள்ளே இருந்த ஏதோ ஒரு பொருள் விரலில் தட்டுப்பட்டுள்ளது.
உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கோகிலா சென்றார். டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, குழந்தையின் உணவுக் குழாயில் ஊக்கு (safty pin) சிக்கியிருப்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து டாக்டர்களின் ஆலோசனையின்படி குழந்தை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது.
அங்கு காது, மூக்கு தொண்டை மற்றும் இரைப்பை குடல் சிகிச்சைத் துறை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், உணவுக் குழாயின் அடிப்பகுதியில் ஊக்கு சிக்கியிருப்பதும் அது திறந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் எஸ்.வி.செந்தில்நாதன், பேராசிரியர்கள் டாக்டர் ஜெ.முத்துக்குமரன், மயக்க டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் கள் அனிருதன், குரு பிரசாத், கவுரி சங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 25-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து ஊக்கை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
இது தொடர்பாக குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் ஜெ.முத்துக்குமரன் கூறியதாவது:
குழந்தையின் உணவுக் குழாயில் ஊக்கு திறந்த நிலையில் இருந்தது. வாய் வழியாக டியூப் விட்டு எடுத்தால், உணவுக்குழாய்க்கு பாதிப்பு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து உணவுக் குழாயை கிழித்து ஊக்கை எடுத்தால், அதனால் ஏற்படும் காயம் குணமாக பல மாதங்கள் ஆகும். எனவே உணவுக்குழாய்க்கு பாதிப்பு இல்லாமல் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து ஊக்கை எடுத்தோம். தற்போது குழந்தை நலமாக இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் குழந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாலியில் மாட்டிய ஊக்கு
கோகிலா அணிந்திருந்த தாலிக் கயிற்றில் ஊக்கு மாட்டி வைத்துள்ளார். குழந்தை பால் குடிக்கும்போது தாலியில் இருந்த ஊக்கை அழுத்தியவுடன், ஊக்கு திறந்துள்ளது. அதன்பின் குழந்தை ஊக்கை வாயில் போட்டு விழுங்கியிருப்பது கோகிலாவிடம் டாக்டர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.