இணைய சமவாய்ப்பு சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் மே 2-ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் இணையம் என்பது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நடைபெறும் புரட்சி காரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வைபர், யு-ட்யூப் உள்ளிட்ட ஏராளமான செயலிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை தகவல் தொடர்பு, பொழுது போக்கு, அறிவுசார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளுதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மிகவும் உதவியாக திகழ்கின்றன.
ஆனால், இந்த இணைய சமவாய்ப்பைக் கெடுக்கும் நோக்குடன் இதனை மாற்றி பணம் படைத்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக் கேட்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்துக்களை பெற்றுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் மிகமோசமான பாதிப்புகள் ஏற்படும். இணையத்தில் எல்லா தகவலும் சமமாக கிடைக்காது. பணம் கொடுக்கும் பத்திரிகைகள், நிறுவனங்கள், அரசியல் அமைப்புகளின் தகவல் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படும். தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த பேராசைத் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
இதற்காக இந்தியாவின் இணைய சமவாய்ப்பை உறுதி செய்யும் நோக்குடன் இணைய சமவாய்ப்பு சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் வரும் மே 2-ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்பார்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.