தமிழகம்

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை நீக்க வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை விதித்தால் மட்டும் போதாது, இந்த நடைமுறையை முற்றிலுமாக நீக்குவதற்கு போதிய இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, கோவையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாவட்ட 2-வது மாநாடு நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.பெருமாள் தலைமை வகித்தார். கேரள மாநில முன்னாள் சபாநாயகரும் அகில இந்திய தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான கே.ராதாகிருஷ்ணன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

கோவை மாநகரில் சட்டமேதை அம்பேத்கருக்கு, செஞ்சிலுவைச் சங்கம் அருகில் சிலை அமைக்க வேண்டும். கோவை மாநகரில் போதிய தொழில்நுட்ப வசதிகள் வழங்காமல் சாக்கடை சுத்தம் செய்வது, அடைப்புகளை சரி செய்வது போன்ற நடவடிக்கைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு சட்டம் இயற்றியும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டே சுத்தம் செய்வதை நிறுத்துவதற்கு போதிய இயந்திரங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வெறும் தடை உத்தரவை மட்டும் கொண்டு வந்தால் போதாது.

ஜென்னீஸ் கிளப்பில் விஷவாயு தாக்கி உயிர் இழந்த இளைஞர்களின் குடும்பத்துக்கு அரசுப்பணியில் நிரந்தர வேலை தர வேண்டும். கவுரக்கொலைகளை தடுக்க தனிச்சட்டச் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவை கோட்ட செயலாளர் வி.சுரேஷ், எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் சி.வெண்மணி, டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் பி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT