மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் 5 மாதங்களுக்கு போதுமான புழுங்கல் மற்றும் பச்சரிசி கையிருப்பில் உள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைய உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில் ஏப்ரல் மாதம் வரை 3,53,914 மனுக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வகை முகாம்கள் தமிழகத்தில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
தற்போது வரை 11,10,871 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 24,626 கார்டுகள் வழங்க தயாராக உள்ளன. இதுவரை 3,70,538 போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 23,339 பேர் கைது செய்யப்பட்டு 663 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.