தமிழகம்

பணம் கொழிக்கும் தொழிலாக மாறும் கஞ்சா விற்பனை: புதிய கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

டி.செல்வகுமார்

பணம் கொழிக்கும் தொழிலாக மாறி வருகிறது கஞ்சா விற்பனை. கஞ்சா கடத்தலில் புதிய நபர்கள் ஈடுபடுத்தப்படுவதால் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவோரைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

கஞ்சா விற்பனை ஆந்திராவில் தொடங்கி தமிழகத்தின் தென்கோடி வரை பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

பிடிபடும் கஞ்சா

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவ்வப்போது யாராவது ஒருவர் பிடிபடுகிறார். அவரிடம் இருந்து 10 முதல் 20 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. அவரைக் கைது செய்கிறது போலீஸ். சமீபத்தில் கோவை ரயில் நிலையத்தில் கஞ்சா பிடிபட்டது. சில இடங்களில் காரில் கடத்தியபோதும் பிடிபட் டிருக்கிறது. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கும் கஞ்சா கடத்தல் குறித்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

கஞ்சா தோட்டம்?

ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே அடர்ந்த காட்டுப் பகுதி வருகிறது. இங்குதான் பெருமளவில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுகின்றன. அங்கேயே காயவைக்கப்பட்ட கஞ்சா செடிகளை 5 கிலோ, 10 கிலோ என்று பேக்கிங் செய்கின்றனர்.

அங்கே ஒரு கிலோ கஞ்சாவை ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி, ரயிலில் கடத்தி வந்து சென்னையில் ரூ.5 ஆயிரத்துக்கு விற்கின்றனர்.

யார் யார் கடத்துகிறார்கள்?

இந்த கடத்தலில் பழைய குற்றவாளிகளுக்குப் பதிலாக புதிது புதிதாக பலரும் களத்தில் இறக்கப் படுகின்றனர். அதனால்தான் போலீஸ் கண்ணில்படாமல் அவர்கள் சர்வ சாதாரணமாக கஞ்சா கடத்துகின்றனர். வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், சொற்ப ஊதியத்துக்கு வேலை செய்பவர்களை குறிவைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபடுத்துகின்றனர். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கஞ்சா கடத்தலுக்கு அவ்வப்போது பெண்களையும் ஈடுபடுத்துகின்றனர். சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, பூங்கா நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் கூவம் கரையோரம் கஞ்சா விற்பனை அமோகம். சுரங்கப்பாதை படிக்கட்டுகளிலும் கஞ்சா கிடைக்கிறது.

மோப்ப நாயிடமும் மாட்டாத கஞ்சா

கஞ்சாவை மோப்பநாய் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிக்கென்று இறுக்கமாக பேக்கிங் செய்து தோள்பையில் வைத்து கடத்துகின்றனர்.

பேக்கிங்கை உடைத்துப் பார்க்கும்போதுதான் கஞ்சா மணம் வீசும். கஞ்சாவை சிகரெட்டில் சேர்த்து புகைப்பது வழக்கம். இப்போது ஆம்லெட்டில் கஞ்சாவை (மிளகுத்தூள் போல) தூவி சாப்பிடுகிறார்களாம்.

எப்படிப் பிடிக்கிறார்கள்?

ரயிலில் கஞ்சா கடத்து பவர்களைப் பிடிப்பது ரயில்வே போலீஸுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படைக்கும், போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீஸுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. எந்த ரயிலில், எந்தப் பெட்டியில் கஞ்சா கடத்தப்படுகிறது என்று உளவாளிகள் கூறும் தகவலின்பேரில் கடத்தல் காரர்களைப் பிடிக்கிறார்கள். கஞ்சா கடத்துவோரைப் பிடிக்க நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் கண்காணிக்கிறார்கள். அப்போது யாராவது புத்தம் புதிய தோள்பையுடன் வந்தாலோ, போலீஸைக் கண்டு மிரண்டாலோ, சந்தேகப்படும்படி இருந்தாலோ அவர்களைப் பிடித்து விசாரித்து, கடத்தலைக் கண்டுபிடிக்கிறார்கள். பிச்சைக்காரர்களைப் பிடித்து இல்லத்தில் சேர்க்கும்போதுகூட கஞ்சா கடத்தல்காரர்கள் பிடிபட் டிருக்கிறார்கள் என்கிறது காவல் துறை.

தமிழக கேரள எல்லையில் கெடுபிடி

தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி போடிமெட்டு வனப்பகுதியில் அதிகளவில் கஞ்சா தோட்டங்கள் இருந்தன.

இரு மாநில போலீசாரின் கெடுபிடியால் கஞ்சா தோட்டங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா பயிரிட்டவர்களில் பெரும் பாலானோர் கடத்தல்காரர்களாக மாறி, இப்போது ஆந்திராவில் இருந்து கடத்திவந்து, தென் மாவட்டங்களுக்கு கொண்டு போய் விற்கின்றனர். 10 கிலோவுக்கும் குறைவான எடையில் கஞ்சா பிடிபட்டால் சிறிய குற்றமாகக் கருதப்பட்டு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. 20 கிலோவுக்கு மேல் இருந்தால் வணிகக் குற்றமாகக் கருதி 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

பிடிபட்டவர் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்

இதுகுறித்து சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் பொன்ராம் கூறுகையில், “கஞ்சா கடத்தலைப் பொருத்தவரை, கஞ்சா வைத்திருக்கும்போது பிடிபடுபவர்தான், தன்னை நிரபராதி என்று போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மற்ற அனைத்து வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை வழக்குப் பதிவு செய்த போலீஸ்காரர்தான் உரிய ஆதாரங்கள், ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்” என்றார்.

சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு கமிஷனர் காந்தி கூறுகையில், “ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வரும்போது சுமார் 2 ஆயிரம் பேர் இறங்கி வருவார்கள்.

கஞ்சா கடத்தலைத் தடுப்பதற் காக அவர்கள் ஒவ்வொருவரையும் சோதிக்க முடியாது. இது நடைமுறைச் சாத்தியமில்லை. இந்தியாவில் எந்த ரயில் நிலையத்திலும், ரயிலில் இருந்து இறங்கி வருபவர்களைச் சோதனை செய்வது கிடையாது” என்றார்.

கட்டுப்படுத்தப்படுமா கடத்தல்?

“ரயிலில் இறங்கி வருபவர்களை சோதனை செய்யாததும், அவர்களது லக்கேஜ், ஸ்கேனரில் சோதிக்கப்படாததும், புதிது புதிதான ஆட்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபடுத்தப்படுவதுமே கஞ்சா கடத்தல் அதிகரிப்புக்கு காரணம். பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதால், பணம் கொழிக்கும் தொழிலாக கஞ்சா விற்பனை மாறிவருகிறது” என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

SCROLL FOR NEXT