மேட்டூர்: காணும் பொங்கலையொட்டி, சேலம் மாவட்டத்தில் நடந்த எருதாட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
எடப்பாடி அருகே கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஸ்ரீ அய்யனாரப்பன் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி, ஏருதாட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில், கோயில் வளாகத்தில் காளை மாடு வைத்திருப்பவர்கள் ஏருதாட்டத்தில் விடுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், கோயில் தர்மகர்த்தா விவகாரத்தில் இரு தரப்பினரிடையே போட்டி போட்டுக் கொண்டு எருதாட்டம் நடத்த அனுமதி பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொங்கணாபுரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட காளை மாடுகளை அப்பகுதி மாடுபிடி வீரர்கள் திடீரென கோயில் முன்பு கொண்டு வந்தனர். இதனை பார்த்த போலீஸார் தடுக்க முயன்றனர். இதையடுத்து, எருதாட்டம் நடத்தக்கூடாது என்று கூறி விரட்டினர். இதனையும் மீறி காளைகளுடன் 50க்கும் மேற்பட்ட காளைபிடி வீரர்கள் கோயிலை சுற்றி வந்தனர். போலீஸாரின் உரிய அனுமதியின்றி நடந்த எருத்தாட்டத்தினால் போலீஸார் மற்றும் பொதுமக்கள் என 5 பேர் காயமடைந்தனர். மேலும், இரு சக்கர வாகனத்தை காளை மாடு முட்டி தூக்கி வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், கெங்கவல்லி அடுத்த செந்தாரப்பட்டி மாரியம்மன் கோயிலில் எருதாட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் காளைகள் ஓட விடப்படும் பாதை ஓரமாக, ஊர் பொதுமக்கள் திரளாக நின்று பார்த்து, கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது, காளை ஒன்று, பார்வையாளர்கள் இடையே புகுந்து ஓடியபோது, சக்திவேல் (23) என்பவரை தாக்கிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்து சக்திவேல் உயிரிழந்தார்.
அதேபோல், தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி பகுதியில் நடந்த எருதாட்டத்தில் பார்வையாளர்கள் இடையே புகுந்து காளை ஓடிய போது, வினிதா (30) என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், கீரிப்பட்டி பகுதியில் நடந்த எருதாட்டத்தை பார்த்து கொண்டிருந்த பெரியசாமி (65) என்பவரை காளை கழுத்தில் முட்டியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து மல்லியக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், மேச்சேரி அருகே புக்கம்பட்டி மாரியம்மன் கோவில் இன்று மாலை எருதாட்டம் நடந்தது. அப்போது, எருதாட்டத்தில் கடைசியாக வந்த காளை, வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (58) என்பவரை வயிற்றி குத்தியதில் பலத்த காயமடைந்தனர். பின்னர், மேச்சேரியில் முதலுதவி பெற்று சேலம் கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மேச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சேலம் 5 ரோடு ரெட்டியூர் மாரியம்மன் கோவில் எருதாட்டம் நடந்தது. இந்த எருதாட்டம் 100க்கும் மேற்பட்ட காளைகளை அழைத்து வந்தனர். முன்னதாக, ஊர் பிரமுகர்கள் மாரியம்மன் கோயிலில் பூஜை நடத்தி கோவில் மாட்டை கோவிலை சுற்றி அழைத்து வந்தனர். தொடர்ந்து, காளைகளை அழைத்து வரப்பட்டு எருதாட்டம் மிக வெமரிசையாக நடந்தது. இதனை பொதுமக்கள் சுற்றி நின்று பார்வையிட்டனர். அங்கு பாதுகாப்புக்காக இருபுறமும் தட்டிகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.