சென்னை: நகைப்பட்டறையில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை சவுகார்பேட்டை, சிங்கண்ணன் தெருவில், 4 மாடி கட்டிடத்தில் நகைப்பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்பவர் இந்த நகைப்பட்டறையை நடத்தி வந்தார். இந்த பட்டறையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இங்கு பழைய,புதிய தங்கத்தை உருக்கி புதிய நகைகள் தயாரித்து சென்னையில் உள்ள நகைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி இரவு ஊழியர்கள் நகைகளை வழக்கம்போல் உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.
இதில், ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து ஊழியர்கள் 7 பேரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் பி சோகித் உயிரிழந்தார்.
மீதமுள்ள நகைப்பட்டறை ஊழியர்களான மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரவிந்த் தாக்கல் (27), ஜாந்தோ இந்திரஜித், சிமந்தோமால் (47), ராகேஷ் (26) ஆனந்த் (32), சூரஜ் (25) ஆகிய 6 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில், சிமந்தோமால், ராகேஷ், சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஜாந்தோ இந்திரஜித், ஆனந்த் ஆகிய இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு சதிச் செயல் ஏதேனும் காரணமா? என யானைகவுனி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.