உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் முந்தைய மாவட்ட ஆட்சியர்கள் என 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.
மதுரை மாவட்டம் அட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2020-ம் ஆண்டில் அட்டப்பட்டி ஊராட்சிக்கு ஒதுக்கிய நிதியில் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் முறைகேடு செய்து உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிதி முறைகேட்டை விரிவாக விசாரிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தேன். என் மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மதுரை மாவட்டத்தில் 2024 முதல் ஆட்சியராக இருந்த எம்.எஸ்.சங்கீதா, கே.ஜே.பிரவீன்குமார், பி.ஆகாஷ் மற்றும் தற்போதைய ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். முன்னாள் ஆட்சியர்கள் 3 பேரும் ஆஜராகியிருந்தனர். பின்னர் நீதிபதிகள் கூறுகையில், “வழக்குகளை நீதிமன்றம் விசாரித்து உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
இந்த உத்தரவுகள் அதிகாரிகளின் பாாவைக்கு வருகிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது அதிகாரிகளை அலைக்கழிக்கும் நோக்கம் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ளவே ஆஜராக உத்தரவிடுகிறோம். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு முடிக்கப்படுகிறது'' என தெரிவித்தனர்.