சென்னை: மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் சுமார் 4 அடி ஆழம், 20 அடி நீளத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முக்கிய சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
மயிலாப்பூர் பகுதியில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தினமும் ஏராளமான கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று அதிகாலை சாலையின் ஒரு பகுதியில் திடீரென மண் உள்வாங்கி 4 அடி ஆழம், 20 அடி நீளத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் பெரிதாக இருந்ததால் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்துவிடாமல் இருக்க பள்ளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.
மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர். இதைத்தொடர்ந்து பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. கான்கிரீட் கலவை கொண்டு பள்ளத்தை நிரப்பி சாலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
முக்கிய சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த பள்ளத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மெட்ரோ பணி, மழைநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு அல்லது மண்ணின் தன்மை காரணமாக சாலை உள்வாங்கியதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சாலையை முழுமையாக சீரமைத்து, மீண்டும் இதுபோன்ற பள்ளம் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.