ஜேசிடி பிரபாகர்
சென்னை: பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைத் தலைவரிடம் 2-வது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கடந்த மே 13-ம் தேதி சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறாடா உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில் இரண்டாக பிரிந்திருந்த அதிமுக பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்தது.
அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, வேலுமணி அணியினர் சந்தித்து கொறாடாவின் உத்தரவை மீறியதற்காக வருத்தம் தெரிவித்து முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர். இதையேற்று தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏ.க்கள் மீது நடவடிக்கை கைவிடப்படுவதாக என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
அதேநேரம் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் (ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல்) மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த 4 பேரிடம் விளக்கம் கேட்டு கடந்த ஜூன் 9-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் ஏற்கனவே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதில் சில விளக்கங்களை சட்டப்பேரவைத் தலைவர் கேட்டிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ.க்கள் ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவரிடம் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதேபோல், இசக்கி சுப்பையா கடந்தவாரமே தனது விளக்கத்தை கூறினார். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பேரவைத் தலைவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.