பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய இளங்கோவன், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய இளங்கோவன், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்து நேற்று செய்தி யாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
பிரதமர் மோடி குறித்து பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக் கிறார். மன்னிப்பு கேட்பது எங்கள் பரம்பரையிலேயே கிடையாது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அதனால்தான் மோடி பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.
சோனியா காந்தி பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிப் பதை பாஜகவினர் நிறுத்திக் கொண்டால் மோடி குறித்து பேசுவதை நானும் நிறுத்திக் கொள்கிறேன். முதலில் பாஜக வினர் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.