திருவண்ணாமலை அருகே சாலை யோர டீ கடைக்குள் அரசுப் பேருந்து நேற்று காலை புகுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்குக் காரணமான அரசுப் பேருந்து கண்ணாடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மேலும் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மதுரையில் இருந்து திரு வண்ணாமலை நோக்கி 50 பயணி களுடன் நேற்று முன்தினம் இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்து நேற்று காலை 5 மணியளவில் திருவண்ணா மலையை அடுத்த தென்மாத்தூர் அருகே வந்தது.
அப்போது, பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து, தென் மாத்தூர் பேருந்து நிறுத்தத்தில் சாலையோர டீ கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில், டீ குடித்துக் கொண்டிருந்த தென்மாத்தூர் காம ராஜர் நகரைச் சேர்ந்த சீமான்(70), ஏழுமலை(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த அதே பகுதியைச் சேர்ந்த அருணாச் சலம்(50), ராமலிங்கம்(58), ரங்கன்(40), சுப்பிரமணி(55), முனுசாமி(45), காளன்(80) ஆகியோர் படுகாயங்களுடன் திரு வண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அருணாச்சலம், ராமலிங்கம், ரங்கன் ஆகியோர் இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவலறிந் ததும் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிர மணியன், ஆட்சியர் ஞானசேகரன், காவல் கண்காணிப்பாளர் முத்தரசி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களையும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையில், விபத்து நடந் ததும் பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். அங்கு திரண்ட பொதுமக் கள் விபத்துக்குக் காரணமான அரசுப் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வெறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்கக் கோரி தென்மாத்தூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்த 5 குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
சென்னை
திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூர் கிராமம் அருகே நேற்று காலை மதுரையிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் தென்மாத்தூர் கிராமத்தை சேர்ந்த சீமான், ஏழுமலை, ராமலிங்கம், ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயும், அருணாசலம் மற்றும் ரங்கன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் மரணம் அடைந்தனர். இந்த செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் தென்மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, முனுசாமி மற்றும் காணல் (எ) கோவிந்தன் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.