மேகேதாட்டு பிரச்சினையில் திமுக என்னதான் முயற்சி எடுத்தாலும் ஆளுங்கட்சியான அதிமுகவின் ஆதரவில்லாமல் தீர்வு வராது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளியில் நேற்று நடந்தது. இதற்காக விண்ணப்பிக்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்காளர் சரிபார்த்தல் பணி தமிழகம் முழுவதும் 2-வது கட்டமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.வாக்காளர்களின் பெயர்கள் பட்டிய லில் உள்ளதா என சரிபார்ப்பது மற்றும் முறைகேடாக இடம்பெற்றுள்ள பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது ஆகிய பணிகள் நடைபெறு கிறது.
ஆனால் இதிலும் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சியை சோ்ந்தவர்களுக்கு மட்டும் விண் ணப்பப் படிவங்களை வழங்கி விட்டு எதிர்கட்சியை சோ்ந்தவர்களுக்கு வழங்க மறுக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி யாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தை பொறுத்தவரையில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கடிதம் எழுதிவிட்டோம் என்று முதலமைச்சர் சொல்லும் நிலை தான் உள்ளது. இப்பிரச்சினையில் திமுக என்ன முயற்சி எடுத்தாலும் ஆளும் அதிமுக ஒத்துழைப்பு இல்லாமல் தீர்வு வராது. கவர்னரால் முதல்வர் என பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டவர் என்ற வகையிலாவது ஒ.பன்னீர்செல்வம் உரிய பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.